Monday 29 April 2013

கடைசியாய் கேட்கிறேன்


எப்படி நான் சொல்வேனோ
என்ன தான் நான் செய்வேனோ
எனக்கே தெரியாமல் என்
மரணம் வரும்

காற்றோடு காற்றாய் என்
உயிர் கரையும்

வானத்தின் இடியோ
வஞ்சகரின் அடியோ
என் தலையில் விழுந்தாலோ
நெருஞ்சி முல்லோ
காதலியின் சொல்லோ
என் இதயத்தை துளைத்தாலோ
என் மரணம் வரும்.

சுனாமியோ, சூரைக்காற்றோ,
சொந்ததின் சூல்ச்சியோ என்னை
சுண்டி விட்டு பார்த்தாலோ
தரையிலே நடக்கும் போது
கால்தவறி விழுந்தாலோ
சாய்ந்து அமரும் போது
நாற்காலி உடைந்தாலோ
என் மரணம் வரும்

சாலையை கடக்கும் போது
சரக்கு வண்டி மோதியோ
வாசலை தாண்டும் போது
வண்டு ஒன்று கடித்தாலோ
என் கவிதை முடிவதற்குள்
என் வீடு இடிந்தாலோ
என் மரணம் வரும்

முருங்கை போல் நீண்ட பாம்பு
என்னை கொத்திவிட்ட அச்சத்திலோ
முத்துபோல் மழலை ஒன்று என்னை
முத்தமிட்ட அதிர்ச்சியிலோ
என் மரணம் வரும்

உலகமே உறங்கி போன
இரவினிலோ இல்லை
பால் நிலவு
மரித்துபோன பகலினிலோ
அறுவது துவங்கும் போதோ
முப்பது முடியும் முன்போ
நோய்நோடி ஏதும் வந்தோ
இன்றோ நாளையோ
இருமி இருமியோ
நான் இறந்து போவேன்.

காலத்தை எமனிட்த்தில்
இறவல் கேட்க இயலுமோ
போகின்ற உயிரை நம்மால்
நிறுத்ததான் கூடுமோ
அகவே இப்போதே
கடைசியாய் கேட்கிறேன்
மானிடமே

பூக்களில் வண்டமர்ந்த
தடம் தேடுங்கள்
தென்றல் வீசுகின்ற
முறை பாருங்கள்
குழந்தையோடு விளையாடி
தோற்றுபோங்கள்
அறுவது வயது ஆயினும் என்ன
பட்டாம்பூச்சி பிடித்து பார்த்து
பறக்க விடுங்கள்

வருடத்திற்கு இருமுறையோ இல்லை
மாதமொரு முறையோ
சொந்தபந்தம் ஒன்றாக
கூடி மகிழுங்கள்
மாமரத்து நிழல் இருந்தால்
அங்கே பந்தி இடுங்கள்
அந்த சமபந்தி விருந்திலே
உங்கள் செல்ல பிராணிகளுக்கும்
கொஞ்சம் இடம் கொடுங்கள்

செல்ல கிளியோ, குட்டி நாயோ
இறந்து போனால் அங்கே
சமாதிகட்டி அஞ்சலி செலுத்துங்கள்

சாரல் மழை வரும்போது
சென்னலை திறங்கள்
சாரம் வழி வழிந்த நீரில்
சன்னல் நனையட்டும்
சாரலோடு வந்த நீரில் உங்கள்
கல்மனம் கரையட்டும்

தாமரை குளத்திலே
நிலவை கண்டால் அதை
குலாங்கல்லெறிந்து
உடைத்து விடாதீர்கள்
விடியும் வரை மிதக்கட்டும்
கண்டு களியுங்கள்

காக்கைக்கு
சோறு வைக்கும் வழக்கத்தை
வருங்கால தலைமுறைக்கும்
கற்று கொடுங்கள்

பாடும் பறவைகளுக்கு நீங்கள்
கூண்டு கட்ட தேவையில்லை
கூடு கட்டி வாழ வழிவிடுங்கள்

மண்ணிலே
புரண்டு பாருங்கள்
ஒருமுறை புழுக்களாக
நதியிலே
நீந்தி பாருங்கள்
ஒருமுறை மீன்களாக
தென்றலோடு
பேசி பாருங்கள்
ஒருமுறை மரங்களாக

மரிக்கும் வரை
வாழ்ந்து பாருங்கள்
வாழும் வரை மனிதர்களாக

1 comment:

  1. unakku endrumae maranam varathu... nan erukkum varai unai marikka vidamaten

    ReplyDelete